பெண்களை ஏமாற்றும் இணைய வேலைவாய்ப்பு மோசடிகள்

ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அளிப்பது போல் பலர் ஏமாற்றப்படுவது சத்தமே இல்லாமல் நடந்து வருகிறது. இதில் பெண்கள், இல்லத்தரசிகள் உள்பட வீட்டில் இருந்து வேலை பார்க்க நினைக்கும் பலர் ஏமாற்றப்படுகிறார்கள்.

பெண்களை ஏமாற்றும் இணைய வேலைவாய்ப்பு மோசடிகள்

‘ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், முதலில் அவருடைய ஆசையை தூண்ட வேண்டும்’ என்ற வசனம் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். அதன் அடிப்படையிலேயே கதாநாயகன், பலரது ஆசையை தூண்டி மோசடியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். 

திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பலரை ஏமாற்ற, அவர்களது ஆசையை தூண்டும் வகையிலான நடவடிக்கைகளிலேயே மோசடி பேர்வழிகள் ஈடுபடுகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

குறிப்பாக தற்போதைய கால கட்டத்தில் இணைய வழியிலான மோசடிகள் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி, அவருடைய செல்போன் எண்ணுக்கு குலுக்கல் முறையில் பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளதாகவும், அதை பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை ஒரு வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து ஏமாற்றுவது, குறைந்த தொகையை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தினால் விலை உயர்ந்த செல்போன் அனுப்பி வைப்பதாக தகவல் அளித்து, வேறு ஏதேனும் பொருளை அனுப்பி ஏமாற்றுவது, வங்கியில் இருந்து அதிகாரி போல் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, அவர்களுடைய ஏ.டி.எம். அட்டை எண், கடவுச்சொல் போன்றவற்றை பெற்று ஏமாற்றுவது என பல்வேறு முறைகளில் பணமோசடிகள் நடைபெற்று வருகின்றன.

இதுஒரு புறம் இருக்க, ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அளிப்பது போல் பலர் ஏமாற்றப்படுவது சத்தமே இல்லாமல் மற்றொரு புறம் நடந்து வருகிறது. இதில் பல வழிகளில் இளைஞர்கள், இல்லத்தரசிகள் உள்பட வீட்டில் இருந்து வேலை பார்க்க நினைக்கும் பலர் ஏமாற்றப்படுகிறார்கள். 
தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் இந்தியாவில் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த பலர் பல வழிகளில் முயன்று வருகின்றனர். வெளியே சென்று வேலை செய்ய முடியாத சமயங்களில், வேறு வழியில் வேலை செய்து பணம் ஈட்ட முடியுமா? என்ற தேடலில் அவர்கள் ஈடுபடுகின்றனர். 
அவர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள், செல்போனில் இணையதள பக்கங்களை பார்க்கும்போது அதில் வரும் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் ஆன்லைன் வேலை வாய்ப்புகள் பற்றி தெரியவரும் நிலையில், அவ்வாறு வேலை செய்தால் என்ன? என்ற எண்ணத்தில் ஆன்லைன் வேலை வாய்ப்புகளை தேட தொடங்குகின்றனர்.

அதிலும் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை பெற குறிப்பாக ஒரு இணையதள முகவரியில் சம்பந்தப்பட்டவரின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துவிட்டால்போதும், தினமும் பல்வேறு நிறுவனங்கள் பெயரில் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் வந்து குவியும். 

அதில் டேட்டா எண்ட்ரி, படிவம் நிரப்புதல், தட்டச்சு செய்தல், ஜெ.பி.இ.ஜி. பக்கத்தை பி.டி.எப். கோப்பாக மாற்றுவது, குறிப்பிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்வது, அதனை பயன்படுத்துவது என பல்வேறு வகையிலான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் உள்ளன. மேலும் ஒரு நாளைக்கு சில மணி நேரம் வேலை செய்தாலே, ஆயிரக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், முகவர்கள் என்ற பெயரில் செல்போன் மூலமோ, வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல் அனுப்பியோ வேலை தேடுபவர்களை தொடர்பு கொள்ளும் நபர்கள், தங்களது வீட்டில் இருந்தே வேலை, சில மணி நேரம் வேலை செய்தாலே பல ஆயிரம் சம்பளம் என்று கூறி வலைவீசுகின்றனர். 

அதனை நம்பும் பெண்கள் உள்ளிட்டோர் ஆன்லைனில் வேலை செய்ய சம்மதிக்கும் நிலையில், அவர்களுக்கு வேலை கொடுப்பதாக கூறப்படும் நிறுவனத்தின் சார்பில் பேசும் நபர்கள், முதலில் நிறுவனத்திற்கு காப்பு தொகையாக குறிப்பிட்ட தொகையை ஒரு வங்கி கணக்கில் செலுத்துமாறும், அந்த தொகை முதல் மாத சம்பளத்துடன் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதன்படி குறைந்தபட்சம் ரூ.350 முதல் ஆயிரக்கணக்கில் பணம் கேட்கப்படுகிறது. மேலும் அந்த நிறுவனங்களில் பலர் வேலை செய்வதாகவும், அவர்களுக்கு மாதந்தோறும் பல ஆயிரங்கள் சம்பளம் வழங்கியதற்கான சான்று என்றும், அந்த நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்றதற்கான சான்று உள்ளது என்றும் வாட்ஸ்-அப் மற்றும் இணையதள பக்கங்களில் பதிவுகள் வருகின்றன.

இதையெல்லாம் பார்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நம்பி பணம் செலுத்தும் பலருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனென்றால், வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட சில நிறுவனங்களிடம் இருந்து வேறு எந்த பதிலும் வருவதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். 

மேலும் அந்த நிறுவனத்தினரை தொடர்பு கொள்ள முயன்றாலும் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறுகின்றனர். இன்னும் சில நிறுவனங்கள் சார்பில் சொன்னபடி பணம் செலுத்தியவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டாலும், அந்த வேலை முடிந்த பின்னர் முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும், அதற்கான காரணத்தை கேட்டால் உரிய முறையில் வேலையை செய்து முடிக்கவில்லை அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி வேலை செய்யவில்லை என்று பதில் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

இது ஒருவகை என்றால் சில நிறுவனங்களில் வேலையில் சேர எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்ற அறிவிப்புடன் வேலை வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் விதித்த நிபந்தனையின்படி சரியாக வேலை செய்பவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 இதனால் மகிழ்ச்சியடைந்து அவர்கள் கொடுக்கும் வேலையை செய்து முடித்தவர்களுக்கு, சம்பளம் அனுப்ப வங்கி கணக்கு விவரம், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற விவரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் பெறப்படுகிறது. 

பின்னர் அவர்களது வேலை குறித்த மதிப்பீடும், அதற்கான சம்பளமாக ரூ.20 ஆயிரத்திற்கு மேல் வழங்கப்படும் என்றும் தகவல் அளிக்கப்படுகிறது. இதனால் தங்களுக்கு சம்பளம் கிடைத்துவிடும் என்று சம்பந்தப்பட்டவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் வேளையில், இணையவழியில் பணப்பரிமாற்றம் செய்வதற்காக குறிப்பிட்ட வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும், அந்த தொகை மறுநாளே அவர்களது சம்பளத்துடன் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும். அதை நம்பி பணம் செலுத்தினால், உள்ளதும் போன கதையாகிவிடுகிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மேலும் பல்வேறு வழிகளில் இணையவழி வேலை வாய்ப்புகள் வழங்குவதாக பண மோசடி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. சில நிறுவனங்களில் நேரில் சென்று பணம் செலுத்தி வேலை செய்தாலும், சம்பளம் பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 

இருப்பினும் சில நிறுவனங்கள் ஆன்லைனில் முறையாக தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலை வழங்கி, சரியான முறையில் சம்பளம் வழங்குவதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் புற்றீசல்போல் பெருகிவிட்ட போலி நிறுவனங்களால் ஆன்லைன் வேலை வாய்ப்புகளை நம்பி பலர் ஏமாற்றுவதே உண்மை என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது. 

வேலை செய்பவர்களுக்கு, வேலை வழங்குபவர்கள்தானே சம்பளம் தர வேண்டும், அதை தவிர்த்து வேலை செய்ய ஏன் பணம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றினாலும், அதையும் மீறி அதிக சம்பளம் போன்ற மாய தோற்றத்தால் ஏமாற்றுபவர்களின் வலையில் ஏமாறுபவர்கள் சிக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு பலே பேர்வழிகள் பயன்படுத்தும் கருவி, வேறு என்ன?, கட்டுரையின் முதலில் குறிப்பிடப்பட்ட வசனத்தை நடைமுறையாக்குவதுதான்.

ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புபவர்களை செல்போனிலோ அல்லது வாட்ஸ்-அப் மூலமோ தொடர்பு கொள்ளும் சிலர், தங்களை ஆன்லைன் வேலை வழங்கும் நிறுவனங்களின் ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்குகின்றனர். 
அவ்வாறு பேசும்போது, தங்கள் நிறுவனத்தில் வேலை வழங்குவதற்கான விதிமுறைகள் என்று சிலவற்றை கூறுகின்றனர். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசும் அவர்கள், தங்கள் நிறுவனம் வடமாநிலத்தில் இருப்பதாகவும், விதிமுறைகளின்படி சரியாக வேலை செய்தால் முழுமையாக சம்பளம் வழங்கப்படும் என்றும், வேலையை குறித்த காலத்தில் முடிக்கவில்லை என்றாலோ, குறிப்பிட்ட அளவிற்கு மேல் தவறுகள் இருந்தாலோ தங்கள் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் வரை பணம் செலுத்த வேண்டும் என்றும், அது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, என்றும் கூறுகின்றனர்.

அதை ஏற்று பணி செய்பவர்களுக்கு, சரியான முறையில் வேலை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்றும், இதனால் அவர்களால் வேலையை முடிக்க முடியாதபட்சத்தில், அதற்கான விளக்கம் கேட்கப்படுவதாகவும், உரிய விளக்கம் அளித்தாலும் ஏற்காமல், ஒப்பந்தப்படி பணம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் பணம் செலுத்த தவறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து மிரட்டும் வகையில் தகவல் வருவதாகவும், சில நேரங்களில் வெளிமாநில போலீஸ் நிலையத்தில் இருந்து அதிகாரி பேசுவதாக சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி மிரட்டுவதாகவும், இதனால் பயந்து பலர் பணத்தை செலுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பேசுபவர்களை, பின்னர் அந்த நிறுவனத்தினர் தொடர்பு கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow