இந்திய பணக்காரர்களுக்கு இப்படியொரு பிரச்சனையா..?

பெரு நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்த காரணத்தால் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, பூன்வாலா போன்ற பலரின் சொத்து மதிப்பு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

இந்திய பணக்காரர்களுக்கு இப்படியொரு பிரச்சனையா..?

இந்திய மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு என மொத்த வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்ட கொரோனா தொற்று நிறைந்த 2020ஆம் ஆண்டில் இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் 2020ல் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்த போது இந்திய ரூபாய் மதிப்பு பெரிய அளவில் குறைந்தது. இதன் வாயிலாக மட்டும் இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சுமார் 4.4 சதவீதம் சரிந்துள்ளதாகக் கிரெடிட் சூசி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்தது. இந்த வேளையிலும் பெரு நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்த காரணத்தால் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, பூன்வாலா போன்ற பலரின் சொத்து மதிப்பு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

ஆனால் இந்தச் சொத்து மதிப்பை டாலர் மதிப்பில் கணிக்கப்படும் போது பெரிய அளவிலான பாதிப்பு உருவாகியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ள காரணத்தால் இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 4.4 சதவீதம் அதாவது 594 பில்லியன் டாலர் அளவில் குறைந்து 12.83 ட்ரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

இதேபோல் 2019ஆம் ஆண்டில் 7,64,000 ஆக இருந்த இந்தியப் பணக்காரர்களின் எண்ணிக்கை 2020ல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாகப் பணக்காரர்களின் எண்ணிக்கை 6,98,000 ஆகக் குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் மூலம் பல பணக்காரர்கள் இப்பட்டியலை விட்டு வெளியேறியுள்ளனர்.

உலக மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவீதம் தான் பணக்காரர்கள். இப்படியிருக்கும் போது கொரோனா தொற்று நிறைந்த 2020ல் உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை 52 லட்சம் அதிகரித்து 5.61 கோடியாக உயர்ந்தது.

இந்நிலையில் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பணக்காரர்கள் எண்ணிக்கை 81.8 சதவீதம் அதிகரித்து 13 லட்சமாக உயரும் எனக் கிரெடிட் சூசி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow